என்ன பொருத்தமான பெயர்! எழுத்துக்களா அவை? இதயம் கீறி எட்டி பார்க்கும் வைர,முத்துக்கள். என்னை அழ வைத்த, சிரிக்க வைத்த, உறங்க வைத்த, விழிக்க வைத்த,கிறங்க வைத்த, காதலிக்க வைத்த, காதலில் விழ வைத்து எழ வைத்த வைர வரிகளல்லவா அவை! ஆயிரக்கணக்கில் மைல்களை தாண்டி, அந்நிய தேசத்தில் அலைந்துகொண்டிருந்தாலும், எனது செவியறைகளில் எப்போதும் முத்து-ராஜாவின் முத்த மழை தான்!
இவரது கவிதைகள் அனைத்தையும் அலச ஆறேழு நூற்றாண்டுகள் வேண்டும். ஆகையால், ஒரே காவியத்தில் இவர் கொட்டிய அனைத்து முத்துக்களையும் கோர்த்தெடுத்து அழகு பார்ப்போம்.
'காதல் ஓவியம்' - ஒரு சாதாரன படத்தில் இவரது அசாதாரன வார்த்தை விளையாட்டு . காதலன் கண் இழந்தவன். காதலியின் சலங்கை ஒலியைப் பிடித்து காதல் பாதையில் தவழ்ந்து செல்பவன். அவளோ இவனின் சங்கீதத்தில் சலங்கைக்கு சுருதி சேர்ப்பவள். இவர்களது காதல் காவியத்தில் (ஓவியத்தில்), கண்களுக்கு இடமில்லாததால், செவியே சிவமயம். இங்கு தான் தனது வைர, முத்துக்களை சிதற விட்டு, கேட்பவர்களை கதற வைக்கிறார் நம் மீசை மன்னர்!
நம்மில் எத்தனை பேர் நதியை கடந்து செல்கையில் நின்று, உற்று கவனித்திருப்போம்?(நதியா, அப்படி என்றால்? என்று சென்னைவாசிகள் கேட்பது என காதில் விழுகிறது!) இதோ, எம் கவிஞரின் பார்வையில்,
நதியில் எழும் அலைகளில் (Ripples) ஏறி இறங்கும் ஆகாயத் தாமரைகள் : -
நதியில் ஆடும் பூவனம், அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
அந்த நதியில் நீராடும் தலைவி:
குளிக்கும் போது கூந்தலை தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை
வெவ்வேறு பாடல்களில் இவர்களது தாபம் :
விரல்கள் விருந்தை கேட்குமே ஒரு விலங்கு விழித்து பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே, ஒரு கனவு படுக்கை போடுமே...போதுமே...
ஜீவன் வானம் போகும், அந்த தேகம் பாலம் ஆகும் .....
தீயில் நின்ற போதும் அந்த தீயே வெந்து போகும்...
நனைந்ததனால் சுடுகிறதே......
விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் .......
..... தன இருதயம் துடிப்பது வெளியில் தெரிய, இளகி,இணையும் இரு மனது !
காதலை, காதலின் வேகத்தை , இதைவிட அழகாக யாரும் சொல்லி நான் கேட்டதில்லை!
மற்றுமொரு பாடலில் மகரந்த சேர்க்கையை ஒரு விழாவாகவே விவரிக்கிறார் கவிஞர்...
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்.....
காதலி(யி)ன் மென்மையை அழகாகச் சொல்கிறார்:
இளங்காற்றை தாங்காத பூவின் சாதி
இடி வீழ்ந்து சருகாதல் யாதோர் நீதி
காதலில் வல்லியது, காதலே வெறுப்பது பிரிவு.
பொங்குது மனம், இது ரகசிய ரணம். கண்களில் குளம் அது உனதர்ப்பணம்
பொன்னெழில் சிலை அது என வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை
இரு விழி இலையெனும் ஒரு குறை இது வரை இதயத்தில் எழுந்தது இல்லையே
விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும் உண்மையில் என் விழி இல்லையே
திருமுகம் வந்து பழகுமோ, அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ, அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரின் உறவாகி, விடிகையில் இன்று அழுது பிரிவாகி,
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ.....
பாரதிக்கு அடுத்து என்னை தமிழ் கவிதை வாசிக்க வைத்து , தமிழை சுவாசிக்க வைத்த வைரமுத்து அவர்களே, வாழ்க நீ எம்மான் .......

kaviullam konda yavarum kannadasanai marakka iyaluma?Inda kavigarin kavigal kaviyam enil,Vairamuthuvin kavithuligalsirukadaithan!!!
ReplyDeleteநன்றி. உண்மை. கண்ணதாசன் ஒரு கவியருவி. காலம் தாண்டி காலூன்றி நிற்கும் ஒரு இமயம். இதை எழுதும் போது எனது கணினியில் வெளிப்படும் கண்ணதாசனின் காந்த வரிகள் என்னை கிறங்க அடிக்கின்றன:
ReplyDeleteஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா ,
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா ...
ஆனால் கலையுலகில் ஒப்பிடுவது அவசியமற்றது என்பது என் தாழ்மையான கருத்து. ஒவ்வொரு கலைஞனும் அந்தந்த கால கட்டத்தில் வரையறுக்கபட்ட கோட்பாடுகளில் வலம் வருகின்றான். எழுபதுகளில் காவஸ்கரின் ஆட்டம் நம்மை அசர வைத்தது. தற்போது டெண்டுல்கரின் திறமை நம்மை திணற வைக்கிறது. வேறுபட்ட சூழல்களில் வெளிப்படுத்தப்பட்ட இவர்களது திறமையை ஒப்பிட எனக்கு ஒப்புதலில்லை. கண்ணதாசன் கவியுலகின் தேவன் என்றால் வைரமுத்து தேவர் மகன். அவர் வானம் எனில் இவர் விடிவெள்ளி (இரண்டிற்கும் எல்லை கிடையாது!).