Thursday, 16 December 2010

வைர... முத்து

என்ன பொருத்தமான பெயர்! எழுத்துக்களா அவை? இதயம் கீறி எட்டி பார்க்கும் வைர,முத்துக்கள். என்னை அழ வைத்த, சிரிக்க வைத்த, உறங்க வைத்த, விழிக்க வைத்த,கிறங்க வைத்த, காதலிக்க வைத்த, காதலில் விழ வைத்து எழ வைத்த வைர வரிகளல்லவா அவை!  ஆயிரக்கணக்கில் மைல்களை தாண்டி, அந்நிய தேசத்தில் அலைந்துகொண்டிருந்தாலும், எனது செவியறைகளில் எப்போதும் முத்து-ராஜாவின் முத்த மழை தான்!

இவரது கவிதைகள் அனைத்தையும் அலச ஆறேழு நூற்றாண்டுகள் வேண்டும். ஆகையால், ஒரே காவியத்தில் இவர் கொட்டிய அனைத்து முத்துக்களையும் கோர்த்தெடுத்து அழகு பார்ப்போம்.

'காதல் ஓவியம்' - ஒரு சாதாரன படத்தில் இவரது அசாதாரன  வார்த்தை விளையாட்டு . காதலன் கண் இழந்தவன். காதலியின் சலங்கை ஒலியைப் பிடித்து காதல் பாதையில் தவழ்ந்து செல்பவன். அவளோ இவனின் சங்கீதத்தில் சலங்கைக்கு சுருதி சேர்ப்பவள். இவர்களது காதல் காவியத்தில் (ஓவியத்தில்), கண்களுக்கு இடமில்லாததால், செவியே சிவமயம். இங்கு தான் தனது வைர, முத்துக்களை சிதற விட்டு, கேட்பவர்களை கதற வைக்கிறார் நம் மீசை மன்னர்!

நம்மில் எத்தனை பேர் நதியை கடந்து செல்கையில் நின்று, உற்று கவனித்திருப்போம்?(நதியா, அப்படி என்றால்? என்று சென்னைவாசிகள் கேட்பது என காதில் விழுகிறது!) இதோ, எம் கவிஞரின் பார்வையில்,

நதியில் எழும் அலைகளில் (Ripples) ஏறி இறங்கும் ஆகாயத் தாமரைகள் : -

          நதியில் ஆடும் பூவனம், அலைகள் வீசும் சாமரம் 
          காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

அந்த நதியில் நீராடும் தலைவி:

         குளிக்கும்  போது  கூந்தலை தனதாடை ஆக்கும் தேவதை 
        அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை 


வெவ்வேறு பாடல்களில் இவர்களது தாபம் : 

    விரல்கள் விருந்தை கேட்குமே ஒரு விலங்கு விழித்து பார்க்குமே 
    இதழ்கள் இதழை தேடுமே, ஒரு கனவு படுக்கை போடுமே...போதுமே...
      
    ஜீவன் வானம் போகும், அந்த தேகம் பாலம் ஆகும் .....
    தீயில் நின்ற போதும் அந்த தீயே வெந்து போகும்... 

    நனைந்ததனால் சுடுகிறதே......
  
    விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் .......
   ..... தன இருதயம் துடிப்பது வெளியில்  தெரிய, இளகி,இணையும் இரு மனது ! 

காதலை, காதலின் வேகத்தை , இதைவிட அழகாக யாரும் சொல்லி நான் கேட்டதில்லை!

மற்றுமொரு  பாடலில் மகரந்த சேர்க்கையை ஒரு விழாவாகவே விவரிக்கிறார் கவிஞர்...
 
         பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் 
        பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்.....

காதலி(யி)ன்  மென்மையை  அழகாகச் சொல்கிறார்:

       இளங்காற்றை தாங்காத பூவின் சாதி 
       இடி வீழ்ந்து சருகாதல் யாதோர் நீதி 

காதலில் வல்லியது, காதலே வெறுப்பது  பிரிவு.

     பொங்குது மனம், இது ரகசிய ரணம்.   கண்களில்  குளம் அது உனதர்ப்பணம்
     பொன்னெழில் சிலை அது என வசம் இலை  இரு கண்களில் ராத்திரி வேதனை 
     இரு விழி இலையெனும் ஒரு குறை இது வரை  இதயத்தில் எழுந்தது இல்லையே 
     விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும் உண்மையில் என்  விழி இல்லையே

     திருமுகம் வந்து பழகுமோ, அறிமுகம் செய்து விலகுமோ 
     விழிகளில் துளிகள் வழியுமோ, அது சுடுவதை தாங்க முடியுமோ 
     கனவினில் எந்தன் உயிரின் உறவாகி, விடிகையில் இன்று அழுது பிரிவாகி,
     தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ.....

பாரதிக்கு அடுத்து என்னை தமிழ் கவிதை வாசிக்க வைத்து , தமிழை சுவாசிக்க வைத்த வைரமுத்து அவர்களே, வாழ்க நீ எம்மான் .......

Wednesday, 15 December 2010

அழகு

எது அழகு? அகமா, புறமா, நிறமா, உடலா, உள்ளமா? எது தான் அழகில்லை? அனைத்தும் அழகு தான். அஃறினை அழகு. உயர்திணை அதைவிட அழகு.  ஒரு பெண்ணின் இரு கன்னங்களையும் இரு கைகளில் ஏந்தி, கண்ணோடு கண் சேர்த்து பாருங்கள். எந்த பெண்ணும் அழகாக தெரிவாள். ஏனெனில் பெண் ஒரு அழகான படைப்பு.

தோல் அழகுதான், தொய்யாத வரை!.முடி அழகு தான், உதிராத வரை.இதயம் அழகு தான். இயங்கும் வரை! எதையும் அழகாய் பாருங்கள். அழகாய் தெரியும். இங்கு அனைத்தும் அழகாகவே படைக்கப்பட்டிருகின்றன.

அனைத்தையும் அழகாய் பார்க்க ஒரு மன பக்குவம் வேண்டும். நீங்கள் அழகாய் பார்க்க, உங்கள் சுற்றுபுறம் அழகாகும். சுற்றியும் அழகாய் இருக்க, நீங்கள் குதூகலமாவீர்கள்.உங்கள் சந்தோஷம் உங்களை அழகாக்கும்.நீங்கள் அழகாக, உங்கள் வாழ்க்கை அழகாகும். இத்தேசம் அழகாகும். இப்பிரபஞ்சம் அழகாகும்.

ஆக, அழகு பார்வையில் தான் இருக்கிறது.

அழகை பார்க்க, அழகாய் பார்க்க பழகிக்கொள்வோம்.

பாரதி

தனிஒருவனக்கு உணவில்லையெனில் இஜ்ஜகத்தினை அழித்திட நினைத்து கடைசியில் உணவில்லாமல் பசியில் இறந்து போன என் தலைவன் இவன். உலகிற்கு இவன் மற்றுமொரு கவிஞன். சிலருக்கு பைத்தியக்காரன். உணர்ந்தவர்களுக்கு இவன் ஒரு ஞானி. மகேசனை பூஜித்து மக்களை ஒதுக்கிய குலத்தில் (குளத்தில்) பூத்து சாதி துறந்த ஒரு அக்னி புஷ்பம் பாரதி.

பாரதி பிறந்த நாளும், இருந்த மண்ணும் எனக்கும் சொந்தம் என்று சொல்வதில் சற்று கர்வபட்டுக்கொள்கிறேன். ஆம், இருவரும் டிசம்பர் 11 ல் பிறந்தோம் (90 வருட இடைவெளியில்!). பாரதி புழங்கிய புதுவையில் நானும் பிறந்து வளர்ந்தேன். பாரதியின் கவிதைகளை கருத்தரித்த குயில் தோப்பில் நானும் அலைந்திருக்கிறேன் (அந்த குயில் தோப்பு இப்போது (காதல்)கிளிகளின் தோப்பாகிவிட்டது வேறு விஷயம்!) புதுவையில் அவன் வாழ்ந்த வீட்டில், அவன் அமர்ந்த ஆசனத்தையும், அவன் உலவிய முற்றத்தையும் ஏங்கி பார்த்தவன் நான். ஏன் பாரதி இறந்து போனாய்? இருந்திருக்கலாமே இன்னும் சில நூற்றாண்டுகள்? அபத்தக்குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது என்னுள்.

வானதி பதிப்பகத்தாரிடம் அனுமதி வாங்கி "பாரதியார் கவிதைகள்" புத்தகப்பெயரின் இரு வார்த்தைகளுக்கிடையில் இடைக்குறி இட்டு மேலே "காதல்" என எழுதத்தோன்றுகிறது எனக்கு! ஆச்சர்யமாய் இருக்கிறதா? ஆம். தேசம், நேசம், வீரம், அன்பு, பண்பு, என பல கவிதைகள் அவன் எழுதி இருந்தாலும், அவை அனைத்திலும் நான் பாரதி இத்தேசத்தின் மேல் கொண்ட  காதலை காண்கிறேன். அப்படியெனில் அது காதல் கவிதைகள் தானே!

எனக்கு பிடித்த பாரதியின் வைர வரிகள்..

1.        "உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
            மெச்சியுனை புகழ்ந்தால் ஊரார் மேனி சிலிர்க்குதடி"

2.       "விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படி செலும் வரம் கேட்டேன் 
           அசைவுரு மதி கேட்டேன், நிதம் தவமென சுடர் தரும் உயிர் கேட்டேன் "

3.       "போனதெல்லாம் கனவினைப்ப்போல் புதைந்தழிந்தே போனதனால் 
           நானும் ஓர் கனவோ, இந்த ஞா லமும் பொய் தானோ? ........
          காண்பதெல்லாம் மறையுமென்றால் , மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? 
          நானும் ஓர் கனவோ, இந்த ஞாலமும் பொய் தானோ?"

இன்னும் எவ்வளவோ.....

காதல்

இந்த மூன்றெழுத்து மந்திரம் வார்த்தையல்ல, வாழ்க்கை! இது பற்றி ஒரு கோடி blogs வந்தாலும் மேலும் ஒன்று முளைக்கத்தான் செய்யும்!.இதன் வசம் விழுபவர்கள், வாசம் மறப்பார்கள், சுவாசம் இழப்பார்கள்.இது உணர்வல்ல, உன்னதம். காதலில் ஜெயித்தவன் அதிர்ஷ்டசாலி. தோற்றவனோ பாக்யசாலி.ஜெயித்தவனின் காதல் ஒருவளிடத்தில் உருகி நிற்கும். தோற்றவனின் காதலோ கடலென விரியும். அனைத்து உயிர்களையும் அணைக்கும்.அவன் காதலை கொண்டே கண்களை திறப்பான்.அனைவரையும், அனைத்தையும் காதலிப்பான்.ஆகையால், காதலியுங்கள்.. காதலித்து தோற்று போங்கள்!

இல்லை. காதலில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. அது இடம் மாறும். வேரோடு பிடுங்கப்பட்ட நாற்று வேறிடத்தில் வளருவது போல காதலும் தடம் மாறினாலும் தழைத்து நிற்கும். செழித்து வளரும். இது புரிவது கடினம். புரிய முடியாது. அறிய வேண்டும். காதல் ஒரு முறை தான் வரும் என சொல்பவர்கள் மூடர்கள்.காதல் இழந்த இதயம், அன்பிற்கு ஏங்கும் ஒரு phoenix பறவை. எத்தனை முறை இறந்தாலும், எழுந்து பறக்கும், அன்பைத்தேடி!

காதல், பசுத்தோல் போர்த்திய காமப்புலி என சிலர் பேசுகின்றனர். இல்லை நண்பர்களே, இல்லை. காமத்தினூடே ஊர்ந்து, வலம் வந்து காமத்தையே விழுங்கிய மலைப்பாம்பு காதல்! அதற்காக காதல் காமம் கடந்தது என பொய் உரைக்க விரும்பவில்லை நான். எனது குருநாதர் பாலகுமாரன் அவர்கள் சொல்வது போல காதல் சமையல் எனில், காமம் மாமிசம். எது உண்ணத்தகுந்தது? சமைத்த மாமிசமா, பச்சை மாமிசமா? புரிந்துகொள்ளுங்கள்.

காதல், பெண்ணை புரிந்துகொள்ள, பெண்மை அறிந்துகொள்ள, ஒரு உன்னத ஊடகம். இங்கு பெண்மை புரிதல் அவசியம். ஏனெனில் பெண், மனிதத்தின் மையப்பகுதி. பெண் தெய்வீகமானவள். காதல் உணர்ந்தவன் பெண்ணை மதிப்பான். பெண்ணை மதிக்கும் சமூகம் உயர்ந்து நிற்கும். தன்னை மதிப்பவனை தலையில் வைத்து ஆடுவாள் பெண். ஆண் பெண்ணை மதிக்க, பெண் ஆணை வியக்க, வாழ்க்கை சிறந்து நிற்கும்.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !

தேடல்




என்ன விந்தையான வாழ்க்கை இது? எதையோ தேடி, எங்கெங்கோ அலைந்து, தேடும் நாமே தொலைந்து போகிறோம்! தேடுவது தான் வாழ்க்கையா? தேடத்தான் இங்கு வந்தோமா? எங்கு தேடினாலும் மிஞ்சுவது தேடல்தானே?


கண்ணதாசன் தான் நினைவுக்கு வருகிறார்:              


              எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
             
இது தான் பாதை, இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
             
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
             
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்....

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!  மாறிவரும் பயணத்தை புரிந்து கொள்வது எப்படி? புரிவதற்குள் பயணம் முடிந்து விட்டால்? புரியாமலேயே போய்விடுமோ?  மயக்கம் தான் அதிகமாகிறது!!

ஆனால் தேடலிலும் ஒரு சுகம் இருக்கிறது. 'அப்பாடா' என்று அமராமல் ஓடிகொண்டே இருப்பதில் ஒரு வித கிறக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது ஓடுபவர்களுக்கு மட்டுமே புரிந்த விஷயம். தேடியது கிடைக்க, கிடைத்ததன் மூலம் ஒரு தேடல். தேடலின் முடிவு தேடல். தேடலின் ஆரம்பம் தேடல். தேடும் போது புலப்படும் விஷயங்கள், தேடிய விஷயத்தை விட உன்னதமானவை.

அப்படி என்ன தான் தேடுகிறாய் என்று கேட்கிறீர்களா?
                         அதைதான் நானும் தேடிகொண்டிருக்கிறேன் !!!