"நடந்தத ஒரு கெட்ட கனவா நெனைச்சு மறந்துடலாம். "
"போதும். இத்தோட விட்டுடலாம். எல்லாத்தையும் மறந்துடலாம். "
எப்படி மறப்பது? எதை மறப்பது? மறப்பது என்றால் என்ன? நினைக்காதிருத்தல் மறந்ததாய் ஆகுமா? நினைவுகள் எங்கு பதிந்திருக்கின்றன? மூளையிலா?மனதிலா? இருக்கும் இடமே தெரியவில்லை. பிறகு அழிப்பது எப்படி? "நடந்ததெல்லாம் மறந்துட்டேன்" - சொல்பவன் முட்டாள். அல்லது நடிகன். நினைவுகள் ஒரு போதும் மறைவதில்லை. அவை எப்போதும் மூளையின் மூலையில் ஒளிந்திருக்கும். எப்போதாவது எட்டிபார்க்கும்.
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ...
இந்த கவிதை பொய்யா?. கவிஞன் பொய் சொல்கிறானா? வெறும் காசுக்காக எழுதப்பட்ட வார்த்தைகளா இவை? இல்லை. இல்லவே இல்லை. நிதர்சனமான உண்மை. காலம் எந்த ரணத்தையும் ஆற்றிவிடும் என்பார்கள். உண்மை. காயங்கள் ஆறிவிடும் - தழும்புகளை தக்க வைத்து விட்டு.
உன்னோடு நான் கொண்ட பந்தம்,
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்.
காய்ந்த மண்ணில் கால் பதித்து ஆயிரம் பேர் நடந்து சென்றாலும் உட்கார்ந்து சுரண்டி பார்த்தவனுக்கு தான் அடி ஈரம் அகப்படும். நாம் யாரையும் உட்கார விடுவதில்லை. நமக்கு நாமே எப்போதாவது சுரண்டி பார்த்து சித்ரவதை பட்டு கொள்கிறோம்.கண்ணதாசன் கேட்டது உண்மை தான். நினைக்க தெரிந்த மனதுக்கு மறக்க தெரிவதில்லை - பழகிய உயிர் விலகி பற்பல ஆண்டுகள் ஆன போதும் .
விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவுகளின் நினைவுகள் நீங்குவதில்லை - நம் நினைவிருக்கும் வரை.